
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிலிப். அவரது மகன் சவுரிஆரோக்கியராஜ். இவரது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு வெளியூர் சென்று விட்டார்.
இவரது வீட்டை பக்கத்து வீட்டைச் சார்ந்தவர்கள் வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக சவுரிஆரோக்கியராஜுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை ரூ.1லட்சம் பணம் பித்தளை சாமான்கள் ஆகியவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதேபோல் அருகிலுள்ள ஆனந்தராஜ், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனையும் மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
மேலும் அந்தோணிசாமி மனைவி சல்தாமேரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2,000 பணத்தையும் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடுகளில் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.