
நெல்லை மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோடு ராஜாநகரை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(வயது 59). இவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நேற்று இரவு கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர் வெங்கடாஜலபதியை வழிமறித்தார்.
அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில், வெங்கடாஜலபதியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதில் வெங்கடாஜலபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடாஜலபதிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
அடிக்கடி 2 பேரும் சந்திக்கும் போதெல்லாம் வாக்கு-வாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக வெங்கடாஜலபதியை அந்த நபர் வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக சந்தேகப்படும் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்-பாக போலீசார் கூறும்போது, வெங்கடாஜலபதி கொலையில் ஒருநபர் மட்டும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.