
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம், ரெயில் நிலையம், பஜார், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது.
இந்த தீத்தடுப்பு வாரவிழா நேற்று முதல் 20-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு தீ தடுப்பு குறித்து செய்முறை மற்றும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் உழவர் சந்தை அருகே திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் உதவி கோட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலை அலுவலர்கள் இளங்கோவன், செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்டோர் தீ தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர். பின்னர் மக்களுக்கு தீத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.