
சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி, நெடுங்குளம், கலுங்குவிளை வழியாக நெல்லை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நெடுங்குளம், கலுங்குவிளை, துவர்க்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்களில் சாத்தான்குளம் வந்து செல்கின்றனர்.
இந்த சாலையானது துவர்க்குளம், நெடுங்குளம் பகுதியில் இயங்கிய கல்குவாரிகளில் இருந்து கற்கள், எடுத்து சென்ற கனரக லாரிகளால் பாரம் தாங்காமல் சிதிலமடைந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதேநிலை தொடர்வதால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்னனர்.
இந்த சாலை குறித்து 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலாகார்மல், சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் ஆகியோர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தார்.
அவர் மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரைத்துள்ளதையடுத்து இந்த சாலையை விரிவாக்கம் செய்து கனகர வாகனம் சென்று திரும்பும் வகையில் சாலை அமைத்திட திட்டம் மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக திட்டம் மதிப்பீடு செய்து கனகர வாகனங்கள் சென்றாலும் சேதமாகாமல் இருக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வட்டார த.மா.கா. தலைவர் முரசொலிமாறன் கோரிக்கை விடுத்துள்ளனர்.