
நடிகர் விஜய்யின் 65-வது படம் ’பீஸ்ட்’. இதனை டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. மதுரையில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் பீஸ்ட் படம் ரிலீசாகி உள்ளது. இந்த நிலையில் மதுரை திரையரங்கம் ஒன்றில் "பீஸ்ட்" படத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர்.
அப்போது சினிமா இடைவேளைக்கு பிறகு, எதிர்பாராதவிதமாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆர்.ஆர்.ஆர். படத்தை நிறுத்து, பீஸ்ட் சினிமாவை திரையிடு" என்று கூச்சலிட்டனர்.
இருந்தபோதிலும் ஆர்.ஆர்.ஆர் சினிமா தொடர்ந்து திரையிடப்பட்டது. ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ஆப்ரேட்டர் ரூமை நோக்கி செல்போன்கள் மூலம் 'டார்ச்லைட்' அடித்தனர். இதனைத்தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நடிகர் விஜயின் பீஸ்ட் சினிமா மீண்டும் தொடர்ந்து திரையிடப்பட்டது.
இதனால் விஜய் ரசிகர்கள் சமாதானம் அடைந்து மீண்டும் திரைப்படத்தை மகிழ்ச்சியாக கண்டுகளித்து வீடு திரும்பினர்.
இதேபோல் மேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் பீஸ்ட் படம் ஓடிக்கொண்டி ருந்தபோது திரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த படத்தில் தீப்பிடிக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அது தான் தெரிகிறது என்று படம் பார்த்தவர்கள் நினைத்தனர்.
பின்னர் பாடலில் தீப்பிடித்த காட்சி முடிந்ததுமே திரை தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து தியேட்டர் ஊழியர்கள் தீயை அணைத்தனர். ஒலிபெருக்கி சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது. படம் ஓடிக்கொண்டிருந்தபோது தீப்பிடித்ததால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.