
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் சோதனை நடந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வாரமாக கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த வாரம் ரெயிலில் கொண்டு வரப்பட்ட குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரெயில்களையும் போலீசார் தினமும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், பாபு, பிரைட் மோகன்தாஸ் மற்றும் போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் நாங்குநேரி பகுதியில் வைத்து சோதனை நடத்தியபோது முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டி ஒன்றில் 9 பார்சலில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் 9 பார்சல்களையும் பறிமுதல் செய்தனர். 19 கிலோ எடை கொண்ட இந்த கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்த போலீசார் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கஞ்சாவை கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை வெளியூர்களில் இருந்து மொத்தமாக கொண்டுவந்து குமரி மாவட்டத்தில் சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 19 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.6 லட்சமாகும்.