
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தின் பல மாதங்கள் மழைப்பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும் கொண்ட கோடை வாசஸ்தலமாக உள்ளது. இங்கு ஏரி, அருவி, நீர்தேக்கம் ஆகியவை அதிக அளவில் உள்ளதால் எப்போதும் பசுமையாக காணப்படும்.
இதனால் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் நகராட்சி நிர்வாகம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையே காற்றின் ஈரப்பதத்தை கொண்டு தண்ணீர் உற்பத்தி செய்யும் எந்திரம் கொடைக்கானல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. பிரையண்ட் பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் ஆகிய பகுதிகளில் இந்த எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு தண்ணீர் உற்பத்தி திறன், கிருமி நீக்கம் குறித்து ஆய்வு செய்த பின்பு நகர் பகுதியில் இதன் பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
காற்றின் ஈரப்பதத்தில் தண்ணீரை உற்பத்தி செய்யும் எந்திரம் பல்வேறு நகரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு எந்திரத்தில் தினமும் 500 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும். குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசில் இருந்து இது தண்ணீரை உற்பத்தி செய்யும். மண்ணில் உள்ளதுபோல படிமங்கள் இல்லாமல் காற்றின் மூலம் தூய்மையான தண்ணீரை இதன் மூலம் பெறப்படும். உற்பத்தி செய்யும் தண்ணீரை சாதாரண நிலை, குளிர்ந்த நிலை, சூடான நிலை என 3 முறைகளில் வினியோகம் செய்யும் வசதியும் உள்ளது. இதனை தயாரிப்பதற்கு மின்சாரம் மட்டுமே போதுமானது. ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய ரூ.1.80 பைசா மட்டுமே செலவாகும்.
வன விலங்குகள், விவசாய தேவைகளுக்கும் தண்ணீரை உற்பத்தி செய்ய சூரிய சக்தியில் இயங்கும் எந்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு அம்சம்.