
கொடைக்கானலில் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருந்தாலும் கோடை சீசனை அனுபவிக்க வருபவர்கள் சற்று அதிகமாக காணப்படும்.
இங்குள்ள இயற்கைக்காட்சிகளை காண்பதற்காகவும், குளு குளு சீதோசனத்தை அனுபவிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில் பல முன்னேற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் வெறும் கையோடு திரும்புவதில்லை. கொடைக்கானலுக்கென பிரத்யேகமாக இருக்கக்கூடிய ஹோம்மேட் சாக்லேட் மற்றும் யூகலிப்டஸ் தைலம் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
2 ஆண்டுகளாக சுற்றுலா முழுவதுமாக முடங்கி இருந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு புத்துயிர் பெற்று உள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி இருக்கக்கூடியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக கொடைக்கானலில் இருக்கக்கூடிய பல கடைகளில் புதுப்புது வகையான ஹோம்மேட் சாக்லேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பில்லிங் வகை சாக்லேட்களும், கேஷிவ் கிரஞ்ச், கேஷிவ்ரிச், பாட்ஜு, மற்றும் கொடைக்கானலில் விளையக்கூடிய பழங்களை வைத்து செய்யக்கூடிய சாக்லேட்டுகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு வகையான சுவைகளிலும், வண்ணங்களிலும் தயாராகி வரும் சாக்லேட் வகைகள் சுற்றுலாப்பயணிகளை வரவேற்றுக்காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோடை சீசனுக்கு முன்பாகவே சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அவர்கள் வாங்கி செல்லும் முக்கிய பொருளாக இந்த சாக்லேட்டுகள் உள்ளது. இதனால் தற்போது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தரமற்ற உணவுகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பல்வேறு ஓட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது- தூத்துக்குடியில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை