search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    1 லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின், நாளை காணொலியில் கலந்துரையாடல்

    மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஒரு ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நாளை (16-ந்தேதி) காணொலி மூலம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை என்ஜினீயர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது, ‘தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்று அலுவலர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று தொடங்கி வைத்தார்.

    கடந்த 6 மாத காலத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் தலைமையின் கீழ் அனைத்து அலுவலர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தை சிறப்பிக்கும் வகையில் 16-ந்தேதி (நாளை) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தந்து 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்குவதற்கான விழாவுக்கு தலைமை ஏற்கிறார். பின்னர் பயன் அடைந்துள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×