search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று மதுரை வந்தடைந்தது
    X
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று மதுரை வந்தடைந்தது

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு

    தொடர் மழை காரணமாக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    மதுரை

    மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு நாள் முன்னதாகவே மதுரை வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா கடந்த 5ந்தேதி முதல் வெகுவிமரிசையாக கொண் டாடப்பட்டு வருகிறது. அதன் முத்தாய்ப்பாக நாளை காலை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வருகிற 16-ந்தேதி காலை 5.50 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்று அழகரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியின்போது ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 2 ண்டு களாக கொரோனா கட்டுப் பாடு காரணமாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

    ஏ.வி. மேம்பாலம் அருகே வைகைஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் பாதைகள் சரிசெய்யப்பட்டு அங்கு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஏராளமானோர் திரளும் வகையில் அந்தப்பகுதி சீரமைக்கப்படுகிறது. திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக கோடைகாலங்களில் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 3 நாட்களுக்கு பிறகு மதுரை வந்து சேர்வது வழக்கம்.

    ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இரண்டே நாளில் ஒருநாள் முன்னதாக இன்று காலை மதுரைக்கு வந்து சேர்ந்தது. கரைபுரண்டு வந்த தண்ணீரை பார்த்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் மங்கள வாத்தியம் இசைத்து மலர்தூவி வைகை தண்ணீரை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

    அணையிலிருந்து 216மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது தற்போது 114மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மீதமுள்ள தண்ணீரை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைகையில் கரைபுரண்ட வெள்ளம் போல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கள்ளழகர் வருகிற 16ந்தேதி மதுரை வைகை ஆற்றில் தங்கப் பல்லக்கில் இறங்கி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. 

    பாதுகாப்பு பணிக்காக சுமார் 3,000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வைகை ஆற்றுப்பகுதியில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×