search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    ரெயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தகோரி பா.ம.க 16-ந்தேதி போராட்டம்: ராமதாஸ்

    தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள் இனியும் தாமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திண்டிவனம்-நகரி புதிய பாதைத் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதன் மதிப்பு ரூ.582.80 கோடி மட்டும் தான். ஆனால், கடந்த 13 ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால், பணிகள் நடைபெறவில்லை. 2025-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இத்திட்டம் முடிக்கப்படும் போது அதன் மதிப்பு ரூ.3,444 கோடியாக உயரும் என்றும் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது 591 சதவீதம் உயர்வு ஆகும். திட்ட மதிப்பு இந்த அளவுக்கு அதிகரிக்க அரசு அனுமதித்திருக்ககூடாது.

    அதேபோல், கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை திட்டத்தின் அங்கமான மயிலாடுதுறை-காரைக்குடி அகலப் பாதை திட்டத்தின் மதிப்பு 325 சதவீதம் அதிகரித்துள்ளது. திண்டிவனம்- திருவண்ணாமலை, சென்னை- மாமல்லபுரம்- கடலூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய திட்டங்களின் மதிப்புகளும் குறைந்தபட்சம் 400 சதவீதம் அதிகரித்திருப்பதாக தொடர்வண்டித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இத்திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படாதது தான் அவற்றின் திட்டச் செலவு அதிகரித்ததற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட தொடர்வண்டித் திட்டங்கள் 13 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் ஆண்டுக்கு 7சதவீதம் முதல் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்திருந்தாலும் கூட இந்த பணிகள் எப்போதோ முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும். வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெருமளவில் பங்களிப்பை செய்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டிற்கான, குறிப்பாக வட மாவட்டங்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

    தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள் இனியும் தாமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. திண்டிவனம் நகரி, திண்டிவனம் திருவண்ணாமலை, சென்னை மாமல்லபுரம் கடலூர், திருப்பெரும்புதூர் கூடுவாஞ்சேரி, தருமபுரி மொரப்பூர் ஆகிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி ஆகிய வருவாய் மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் தொடர்வண்டித்துறை அலுவலங்கள் முன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×