search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

    தமிழகத்தில் இதுவரை 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

    மேலும் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இந்த வரிசையில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு குறைந்துள்ளது.

    இதனால் இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது. அதே வேளையில் தினமும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுவிட்டனர். எனவே இனிவரும் நாட்களில் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

    தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களே தடுப்பூசி முகாம் நடத்திக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் கண்டறிந்து இதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.

    இது தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளது. கொரோனா புதிய உருமாற்றத்தை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×