search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின்

    நீட் தேர்வை ரத்து செய்வதில் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாபோல் செயல்படுகிறார்- கவிஞர் முத்துலிங்கம்

    முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ் நாட்டுக்கு நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என கவிஞர் முத்துலிங்கம் கூறினார்.
    சென்னை:

    டாக்டர் போஜன் குமரேசன் பாடிய அருணகிரி நாதரின் ‘கந்தர் அநுபூதி’ இசைப்பேழை வெளியீட்டு விழா சென்னை வாணி மகாலில் நடைபெற்றது.

    விழாவில் திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினரும், அ.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளருமான கவிஞர் முத்துலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நீட் தேர்வெல்லாம் இல்லாத காலத்தில் மருத்துவம் பயின்று டாக்டர் ஆனவர் போஜன் குமரேசன். நீட் தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து அவர்கள் நீட் தேர்வு பயிற்சி பெற முடியாது.

    அதனால்தான் அன்றைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நான் இருக்கும் வரையிலும் நீட்தேர்வை அனுமதிக்க மாட்டேன். இந்தி திணிப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பகிரங்கமாக துணிச்சலோடு அறிவித்தார். அவருக்குப் பின் வந்தவர்கள் துணிவோடு அதை எதிர்க்கவில்லை.

    அந்த வகையில் இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ஜெயலலிதாபோல் துணிவோடு எதிர்க்கிறார். அவர் துணிச்சலை வரவேற்கிறேன். மற்ற சில பிரச்சினைகளில் அவர் கருத்துக்கு எதிர்க்கருத்து என்னைப் போன்றவர்களுக்கு உண்டென்றாலும் நீட் தேர்வு வி‌ஷயத்தில் அவரை நான் பாராட்டுகிறேன்.

    எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் அந்த வகையில் அவரை ஆதரிப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் கடத்துவது தவறானது. தனது விருப்பு வெறுப்பு அரசியலை கவர்னர் இதில் காட்டக்கூடாது.

    அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் அளவுக்கு அளவு கடந்த அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்லை. கவர்னர் காலம் கடத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது பற்றி கவர்னர் கேள்வி கேட்கலாம். அப்படி இதில் எதுவுமில்லை.

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருக்கிறது. அதனால்தான் அதை நீக்க வேண்டும் என்கிறோம்.

    முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ் நாட்டுக்கு நீட் தேர்வு விலக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    அரசியல் அமைப்புச் சட்டமுறைப்படி கவர்னர் நடந்து கொள்ளாவிட்டால் அன்று அண்ணா சொன்னது போல் கவர்னர் பதவியே தேவையில்லை என்று நாடெங்கும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை கூட வரலாம்.

    இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

    Next Story
    ×