search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்ட வீதிகள் சீரமைக்கப்படுமா?

    தற்போது கோவிலில் இருந்து தளி ரோடு சந்திப்பு பகுதி வரை தேசிய நெடுஞ்சாலை படுமோசமாக குண்டும், குழியுமாக இருசக்கர வாகனங்களே தடுமாறும் நிலையில் உள்ளது.
    உடுமலை:

    உடுமலை நகரில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஆண்டுதோறும், நடைபெறும் கோவில் தேரோட்டத்திலும், சுற்றுப்பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, தேர்த்திருவிழா தேரோட்டம் வரும், 21-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்காககோவில் நிர்வாகம் தரப்பில் தேர் தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தேரோட்ட பாதை குறித்து உரிய கவனம் செலுத்தாமல் உள்ளனர். 

    கோவிலில் துவங்கும் தேரோட்டம் தேசிய நெடுஞ்சாலையில் தளி ரோடு சந்திப்பு வரையும், அங்கிருந்து, தளி ரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் கோவிலை வந்தடையும்.

    தேர் எவ்வித தடையும் இல்லாமல் பவனி வரும் வகையில் இந்த தேரோட்ட பாதை திருவிழாவுக்கு முன் முழுமையாக சீரமைக்கப்படும். நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளால் திருவிழாவுக்கு முன், தேரோட்ட பாதையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது கோவிலில் இருந்து தளி ரோடு சந்திப்பு பகுதி வரை தேசிய நெடுஞ்சாலை படுமோசமாக குண்டும், குழியுமாக இருசக்கர வாகனங்களே தடுமாறும் நிலையில் உள்ளது. இதே போல் மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள தேரோடும் வீதிகளில் பாதாளச்சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. 

    சில இடங்களில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகளும், முறையாக சீரமைக்கப்படவில்லை. தேரோட்டத்துக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் உடனடியாக தேரோட்ட பாதையின் நிலை குறித்து அனைத்து துறையினரும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, குட்டைத்திடலில், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும். மாலையில், மேடை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. அதேநேரம், கோவில் சுற்றுப்பகுதியில் அதிகப்படியான தற்காலிக கடைகள் அமைக்கப்படும் என்பதால், பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    குறிப்பாக, அம்மனை வழிபடவும், பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசிக்கவும் பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள் இங்கு வருகை புரிவர். 

    இதனால், திறந்தவெளியில் அவசரத்துக்கு ஒதுங்குவதை தவிர்க்கும் வகையில், தேவைக்கு அதிகமான இடங்களில், ‘மொபைல் டாய்லெட்’ அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. போதுமான அளவுக்கு தண்ணீர் வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×