search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
    X
    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

    கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்- பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு

    டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் சில சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அதனால் அவரை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அப்போது நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

    மு.க.ஸ்டாலின் சொன்ன அனைத்து வி‌ஷயங்களையும் பிரதமர் உன்னிப்பாக கேட்டுக்கொண்டார். இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7.15 மணிக்கு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக அவர் எப்போது டெல்லி சென்றாலும் டெல்லியில் உள்ள அவரது சொந்த வீட்டில் தங்குவது வழக்கம்.

    ஆனால் இந்த முறை தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கி உள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது என்ன காரணங்களுக்காக சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களில் இதுவரை எத்தனை சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதற்கான விவரங்களையும் பட்டியலிட்டு விளக்கி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) வரை டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அதன் பிறகு சென்னை திரும்புவார் என தெரிகிறது. டெல்லியில் அவர் இன்று யார்-யாரை சந்தித்து பேச உள்ளார் என்ற விவரம் எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் கவர்னரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×