search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர்- வானூர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    மக்களோடு மக்களாக நெருக்கமாக இருக்கக் கூடிய துறை உள்ளாட்சித்துறை என்று வானூர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொழுவாரி பகுதியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று திறந்து வைத்தார்.

    அந்த வளாகத்தில் பெரியாரின் உருவச்சிலையையும் திறந்து வைத்து மரியாதை செய்தார்.

    அதன்பிறகு ஒழுந்தியாம்பட்டு பகுதிக்கு சென்று 10,722 பயனாளிகளுக்கு 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.24.77 கோடி மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்தும் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் இந்த அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறது. இன்று உங்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இங்கு தாய்மார்களிடம் சில கேள்விகள் கேட்டேன். இப்போது நடைபெற்று கொண்டிருக்கிற இந்த 10 மாத கால தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த ஆட்சி ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

    ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் எந்த குறையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறோம் என்று கூறினார்கள்.

    இது தொடரும். தொடர வேண்டும். அப்படி தொடர வேண்டும் என்பதற்காக உறுதி எடுத்துக் கொள்ளக் கூடிய, நிறைவேற்றக் கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

    நான் உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியபோது கலைஞர் என்னை பாராட்டினார். மக்களோடு மக்களாக நெருக்கமாக இருக்கக் கூடிய துறை உள்ளாட்சி துறை. இந்த துறை அப்போது எப்படி வேகமாக செயல்பட்டதோ அதேபோல் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையும் வேகமாக செயல்படுகிறது.

    அதனால் தான் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவிக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் சிலரின் சூழ்ச்சிகள் எடுபடவில்லை. சூழ்ச்சிகளை தடுத்தது திராவிட மாடல் தலைவர்கள் தான்.

    பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவிற்கு முன்னேறி இருக்காது. அதனால் தான் பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றவே சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.

    அந்த திட்டம் மீண்டும் இப்போது சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டம் புதுப்பிக்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு சமத்துவ புரங்கள் சீரமைக்கப்படும். இதுதவிர அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டமும் கடந்த ஆட்சிகாலத்தில் கிடப்பில் போடப்பட்டது. அந்த திட்டமும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளிடமும், பொதுமக்களிடமும் நேரடியாக சென்று உரையாடியதோடு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×