search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண மோசடி
    X
    பண மோசடி

    வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.10 லட்சம் மோசடி

    நெல்லை அருகே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.10 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் பசுக்கிடை விளையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 34). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்புறம் பேசிய நபர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து பேசுவதாகவும், தங்களது செல்போனுக்கு வந்துள்ள லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கு அப்டேட் ஆகும் என்றும் கூறி உள்ளார்.

    அவரும் செல்போனுக்கு வந்து லிங்கை கிளிக் செய்துள்ளார். இதேபோல் 3 முறை ‘கிளிக்‘ செய்யுமாறு எதிர்புறம் பேசிய நபர் கூற, அவரும் அப்படியே செய்துள்ளார்.

    உடனே அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 800 எடுக்கப்பட்டு விட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மீண்டும் தனக்கு வந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அந்த நபர் போனை எடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் தனது கணவர் பாலசுப்பிரமணியனிடம் தகவல் தெரிவித்தார்.

    சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த பால சுப்பிரமணியன் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் அதிகமாக அரங்கேறி வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக போலீசார் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    ஆனாலும் தினந்தோறும் 5-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சைபர் கிரைம் போலீசார் ஓய்வின்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×