search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம்ஆண்டு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த 43-வது செஸ் ஒலிம்பியாட்டில் சீனா முதல் இடத்தை பிடித்தது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. முதல் முறையாக இந்தியாவில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை நடத்தும் பெருமையை சென்னை பெற்றுள்ளது.

    இந்த போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அந்த போட்டி ரஷியாவில் இருந்து மாற்றப்பட்டது.

    பல நாடுகள் இந்த போட்டியை நடத்த முயற்சித்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் தமிழக அரசின் அனைத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் சென்னையில் போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றப்பட்டது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த போட்டி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதி இன்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த சரித்திரம் மிகுந்த போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் 75 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இதில் 25 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    அந்த அடிப்படையில் இந்தியாவின் செஸ் தலைநகராக சென்னை இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த போட்டி மூலம் தமிழகத்தின் விருந்தோம்பில் உலகம் எங்கும் செல்ல இருக்கிறது. முதல்-அமைச்சர் இதை மிகவும் முக்கியமான பணியாக எடுத்து இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×