search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    சென்னையின் 2-வது விமான நிலையம் பன்னூர் அல்லது பரந்தூரில் அமைகிறது: தமிழக அரசு தீவிர பரிசீலனை

    சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கும் ஆரம்பகட்ட பணி நடந்து வருகிறது. இதற்கான 2 இடங்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

    இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டு மத்திய விமான ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விமான ஆணைய குழுவினர் இந்த 4 இடங்களிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

    இதில் 2-வது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. படாளம் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு, சில கட்டுப்பாடுகள் மற்றும் பல்வேறு அம்சங்களை பரீசிலித்த பின்னர் அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

    இது தொடர்பான விரிவான அறிக்கையை விமான நிலைய ஆணையம் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்திற்கு (டிட்கோ)வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இதன் பின்னர் அதிகாரிகள் குழு, ஆய்வு செய்து மாநில அரசிடம் இறுதி முடிவை தெரிவிக்கும். இதைத்தொடர்ந்து 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசு இறுதி செய்து கூறும் விமான நிலையம் அமைக்க சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி இருக்கும். இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக நிலத்தை கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறும்போது,

    சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கும் ஆரம்பகட்ட பணி நடந்து வருகிறது. இதற்கான 2 இடங்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அரசின் இறுதி முடிவுக்கு பின்னர் ஒரு இடத்தை இறுதி செய்வோம். அதில் தொழில்நுட்ப சாத்தியங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெறும்.

    இதன்பின்னர் வழிகாட்டுதல் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் பல அனுமதிகள் பெற்றதும் விமான நிலையத்துக்கான பணிகள் வேகமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×