search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    லாட்டரி விற்பனைதடை செய்யப்பட்டாலும், ஆன்லைன் மூலம் பல்வேறு விளையாட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு, இளைஞர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். சிலதற்கொலை நிகழ்வுகளும் நடந்தேறின. இதனையடுத்து, ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடுக்கும் வகையில், முதலில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு 04-02-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 05-02-2021 அன்று நிறைவேற்றப்பட்டது.

    ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக மேற்படி சட்டம் கொண்டு வரப்பட்டு, இந்த விளையாட்டு சிலமாதங்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருந்தது. தற்போது மேற்படி சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து, அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவதாகவும், ஆன்லைன் விளையாட்டில் வெற்றி அடைபவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக விளையாட்டுத் துறையினரும், திரைப்படத் துறையினரும் விளம்பரம் செய்வதன் காரணமாக இளைஞர்கள் இதில் நாட்டம் செலுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

    எனவே இந்த விளையாட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 1968-ம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி இந்த ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் அல்ல, திறமையை வளர்க்கும் விளையாட்டு என்று மேற்படி விளையாட்டினை நடத்தும் நிறுவனங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது திறன் விளையாட்டாக இருந்தால், இதில் உள்ள அபாயங்கள் குறித்து விளம்பரத்தில் ஏன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது?

    இந்தநிலைமை தொடர்ந்தால், இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பினைத் தேடுவதிலும் நாட்டம் செலுத்துவதை தவிர்த்து, இதுபோன்ற அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தரமக்கள்தான். இது போன்ற விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆன்லைன் மூலம் விளையாடப்படும் பேன்டசி, லூடோ, போக்கர், ரம்மி, கால்பிரேக் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×