search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவர் பூங்காவனம்
    X
    டிரைவர் பூங்காவனம்

    பள்ளி நிர்வாகத்துக்கு 6 கேள்விகள்: 64 வயது முதியவரை டிரைவராக நியமித்தது ஏன்?

    வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளிக்கூட வளாகத்துக்குள் வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கு 6 கேள்விகளை கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
    சென்னை:

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த வெற்றிவேல்- ஜெனிபர் தம்பதியின் மகனான தீக்ஷிக். (வயது 7), கோயம்பேட்டை அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவன் தீக்ஷித், பள்ளி வேனில் இருந்து இறங்கி பள்ளி வளாகத்தில் நடந்து சென்றபோது, தான் வந்த பள்ளி வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.

    ஆசை ஆசையாய் பள்ளிக்கு சென்ற தங்களது மகன் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் பள்ளிக்கு பதறியடித்துக் கொண்டு பெற்றோர் ஓடி வந்தனர். உறவினர்களும் அங்கு திரண்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்தனர்.

    முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே மாணவன் தீக்ஷித் உயிரிழந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் வேன்களில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் மற்ற பெற்றோர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பள்ளி வேன்களில் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வரும்போதும், வீடுகளுக்கு திரும்ப அழைத்துச் செல்லும் போதும் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக மாணவ-மாணவிகளை வேனில் இருந்து இறக்கிவிட்ட பின்னர் டிரைவரும், கண்காணிப்பு ஊழியரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் பல பாதுகாப்பு அம்சங்களும் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.

    இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் முறையாக கடைபிடிக்கவில்லை என்றே மாணவனின் உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு 6 கேள்விகளை கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அதில் முக்கியமான 6 கேள்விகளையும் கேட்டு உரிய பதிலை விளக்கமாக அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் நோட்டீசில் இடம் பெற்றுள்ள கேள்விகள் வருமாறு:-

    * பள்ளி வேன் டிரைவராக 64 வயது முதியவரை நியமித்தது ஏன்?

    * பள்ளி பஸ்சில் தனியாக பொறுப்பாளர்கள் இல்லாதது ஏன்?

    * விபத்து பற்றி தெரிந்தும் பிற்பகல் வரை பள்ளி தாளாளர் பள்ளிக்கு ஏன் வரவில்லை?

    * பள்ளி வாகனத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் பத்திரமாக இறங்கி வகுப்புகளுக்கு சென்று விட்டனரா? என்பதை முதல்வர் உறுதி செய்யாதது ஏன்?

    * பள்ளி தொடங்கியதும் முதல் பாடவேளைக்கு செல்லும் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய உடற்கல்வி ஆசிரியர் விடுமுறையில் சென்று விட்ட நிலையில் அவருக்கு மாற்றாக யாரையும் நியமிக்காதது ஏன்?

    * பள்ளி வளாகத்தில் மெதுவாக செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்காதது ஏன்?

    இதுபோன்ற 6 கேள்விகளை கேட்டுள்ள பள்ளி நிர்வாகம் 24 மணி நேரத்துக்குள் உரிய விளக்கத்துடன் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்காத நிலையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உதவி கமி‌ஷனர் கலியன், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரான முதியவர் பூங்காவனம், பெண் ஊழியர் ஞானசக்தி, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களில் டிரைவர் பூங்காவனம், ஞானசக்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 304(2) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கவனக்குறைவாக ஓட்டினால் விபத்து ஏற்படும் என்று தெரிந்தே அஜாக்கிரதையாக வேனை இயக்கிய குற்றத்துக்காக இந்த சட்டப்பிரிவு போடப்பட்டது. இதையடுத்து இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து இருவரையும் சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால் டிரைவர் பூங்காவனத்துக்கு சர்க்கரையின் அளவு உடலில் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சர்க்கரையின் அளவு இன்று குறையும்பட்சத்தில் பூங்காவனம் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இதற்கிடையில் பெண் ஊழியரான ஞானசக்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி தாளாளர், முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    Next Story
    ×