search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.
    X
    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் குறைந்த அளவே பஸ்கள் ஓடியதால் பயணிகள் அவதி- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிப்பு

    தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று குறைந்த அளவே பஸ்கள் ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    நெல்லை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.  
    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டது.

    மத்திய அரசின் தொழி லாளர்கள் விரோத திட்டங்கள், பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயித்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

    இதனையொட்டி இன்று அதிகாலை முதலே நெல்லையில் பஸ் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. நெல்லையில் வண்ணார்பேட்டை தாமிர பரணி போக்கு வரத்துக்கழக பணிமனை, புறவழிச்சாலை பணிமனை களில் இருந்து வழக்கத்தைவிட மிக குறைவான பஸ்களே இயக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங் களுக்கு தினந்தோறும் 900 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி 300 பஸ்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    இதேபோல் மாநகர பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக காலை 8 மணிக்குள் சுமார் 133 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று 35 பஸ்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் போக்குவரத்து பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் காலையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பஸ்கள் புறப்படும். ஆனால் இன்று காலை 40 பஸ்கள் வரையே புறப்பட்டு சென்றன.

    செங்கோட்டை பணிமனையில் 42 பஸ்கள் உள்ள நிலையில் 12 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. அதே நேரத்தில் கேரளாவிற்கு இயக்கப்படும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் இருந்து காலை நேரத்தில் வழக்கமாக 310 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி பாதியளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை நேரத்தில் 25 சதவீதம் வரை மட்டுமே அரசு பஸ்கள் இயங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்றனர். இன்று அவர்கள் காலையிலேயே பஸ் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்து கிடந்தனர்.

    வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கமாக தென்காசியில் இருந்து நெல்லைக்கு, நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயங்கும்.  ஆனால் இன்று காலை 6 மணிக்கு பின்னரே ஒரு சில பஸ்கள் இயங்கியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறைவான அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்தனர்.  

    காலை நேரத்தில் பஸ்கள் இல்லாததால் குறித்த நேரத்தில் அலுவலக பணிக்கு செல்லவேண்டியவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். அவற்றில் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையங்களில் மக்கள் காலை நேரங்களில் பஸ்சுக்காக பரிதவித்து நின்றதை காணமுடிந்தது. அதே நேரத்தில் மாவட்டங்களில் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

    பள்ளிகளில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றதால் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.

    பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள், வாடகை கார்களும் ஓடவில்லை. இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். ஒரு சில இடங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல போலீசார் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். எனினும் பல இடங்களில் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை.

    தென்காசி மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×