search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது

    தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் ரெயில்களில் பயணிகளுக்கு சுமார் 6 லட்சம் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை புதிதாக தயார் செய்யப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக ரெயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. முன்பதிவு இல்லாத பயணத்திற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.

    முன்பதிவு செய்த பயணிகளும் கட்டுப்பாடுகளுடன் ரெயில் நிலையத்திலும், ரெயில்களிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    முக கவசம் அணியாமல் ரெயில் மற்றும் நிலையங்களில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு போன்றவை நிறுத்தப்பட்டன. இதனால் தொற்று பரவக்கூடும் என்பதால் ரெயில்வே வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

    குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யக் கூடியவர்கள் தாங்களே போர்வை, படுக்கை விரிப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தவிர பயணிகளுக்கு ரெயில்களில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதும் நிறுத்தப்பட்டது.

    நாடு முழுவதும் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு வசதிகள், சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

    இந்தநிலையில் கொரோனா தொற்று தற்போது கணிசமாக குறைந்து கட்டுக்குள் வந்திருப்பதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வசதிகளை படிப்படியாக வழங்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளன. ரெயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்வதோடு பயணத்தின் போது வழங்கப்படுகிறது.

    மேலும் தொற்று பெருமளவில் குறைந்ததால் வருகிற 31-ந்தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விலக்கி கொள்வதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை ஆகியவற்றை மீண்டும் வழங்க ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    இதையடுத்து தெற்கு ரெயில்வேயில் உள்ள அனைத்து ரெயில்களிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்பு வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் ரெயில்களில் பயணிகளுக்கு சுமார் 6 லட்சம் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை புதிதாக தயார் செய்யப்படுகிறது.

    2 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக வழங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம் புதிய போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை அதற்கான துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    தற்போது குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் உடனடியாக வழங்க முடியவில்லை. மேலும் போர்வை, படுக்கை விரிப்புகள் முழுமையாக தயார் ஆனதும் அவற்றை அனைத்து ரெயில்களுக்கும் ஒரே நேரத்தில் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி பயணிகளுக்கும், அதனை தொடர்ந்து 2-வது வகுப்பு ஏ.சி. பயணிகளுக்கும், இதையடுத்து 3-ம் வகுப்பு பயணிகளுக்கும் படிப்படியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஏ.சி.பெட்டி பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு ரெயிலில் கொடுத்துவிட்டு மற்றொரு ரெயிலில் கொடுக்கவில்லை என்றால் பிரச்சினை வரும் என்பதால் அனைத்து ரெயில்களிலும் ஒரே சமயத்தில் இன்னும் 2 வாரத்திற்குள்ளாக வினியோகிக்கப்படும்’’ என்றனர்.

    Next Story
    ×