search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐந்து நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    ஐந்து நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    திருக்குறுங்குடி பங்குனி திருவிழா- ஐந்து நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

    திருக்குறுங்குடி பங்குனி திருவிழாவையொட்டி ஐந்து நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோவில் உள்ளது. 

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். 

    அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 18-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினசரி நம்பிசுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று இரவில் தொடங்கியது. இதையொட்டி நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. 

    அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர். 

    ரதவீதிகள் வழியாக, திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் இன்று அதிகாலை 4.40 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

    அப்போது நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

    அதன்பின் நம்பி சுவாமிகள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    10---ம் நாளான வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
    Next Story
    ×