search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    அதிகாரத்தை விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை வளர்க்க ஆலோசனை சொல்லவில்லை- கே.எஸ்.அழகிரி வேதனை

    அகில இந்திய அளவில் மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரசுக்கு இரட்டை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்ற லெனின் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் தேசத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியும். மத்தியில் 7 ஆண்டுகளாக மட்டுமே ஆட்சியில் இல்லாமல் இருக்கிறோம். இதனால் சோர்ந்து விட வேண்டியது இல்லை. நாம் செய்த தவறுகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    அகில இந்திய அளவில் மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரசுக்கு இரட்டை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த தலைவர்கள் எல்லாம் அதிகாரத்துக்கு வருவதை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்.

    தமிழகம் மட்டும் அல்லாமல் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன? ஆட்சியை பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி அவர்கள் ஆலோசனை சொல்வதில்லை.

    ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் திருப்பூரில் வெளியிட்டபோது தியேட்டரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உறுதிமொழி ஏற்று இருக்கிறார்கள். இதனை போலீசார் எப்படி அனுமதித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி உள்பட சில இடங்களில் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தி.மு.க. தலைமையிடம் பேசி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், எஸ்.ஏ.வாசு, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, ரஞ்சன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×