search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சை பரப்புதலில் நெய் குளத்தின் மத்தியில் காத்தாயி அம்மன் காட்சி.
    X
    பச்சை பரப்புதலில் நெய் குளத்தின் மத்தியில் காத்தாயி அம்மன் காட்சி.

    நெய் குளத்தின் மத்தியில் காட்சி தந்த காத்தாயி அம்மன்

    தஞ்சை அருகே கோவிலூர் நெல்லித்தோப்பில் நெய் குளத்தின் மத்தியில் காட்சி தந்த காத்தாயி அம்மனை ஏராளமான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள கோவிலூர் நெல்லிதோப்பில் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர். 
     
    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படும். அதில் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி நேற்று பங்குனி உத்திரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

    இதனை முன்னிட்டு கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு அபிஷேக ஹோமம் நடைபெற்றது. மேலும் மாரியம்மன் கோவிலில் உள்ள காடவராயர் குளக்கரையில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்து காத்தாயி அம்மன் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து காத்தாயி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து காத்தாயி அம்மனுக்கு மிகவும் இஷ்டமான  மகாபிஷேக திருப்பாவாடை ஆராதனை என்னும் பச்சை பரப்புதல் நடைபெற்றது.

    அதாவது 50 கிலோ சர்க்கரை பொங்கல், 175 கிலோ புளியோதரை, 30 கிலோ தயிர் சாதம், 100 கிலோ 5 வகை பலகாரம், 60 கிலோ பழங்கள், ரூ.18500 மதிப்புள்ள புஷ்பம், 60 லிட்டர் பால், 60 கிலோ பஞ்சாமிர்தம், 75 கிலோ நெய் ஆகியவை அடங்கிய பொருட்கள் காத்தாயி அம்மன் திருப்பாவாடை நிவேதானத்தின் மத்தியில் பரப்பப்பட்டன. 

    இதில் மத்தியில் உள்ள சர்க்கரை பொங்கல் நெய் குளத்தின் மத்தியில் காத்தாயி அம்மன் காட்சி தந்தார். அம்மனின் திருவுருவத்தை கண்ணாரக் கண்டு பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர். விழாவில் காத்தாயி அம்மனை குலதெய்வமாக கொண்ட தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். 

    பக்தர்களுக்கு புளியோதரை, தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், லட்டு, முறுக்கு, அதிரசம் வழங்கப்பட்டது. இது தவிர தன்னார்வலர்கள் பலர் ரோஸ்மில்க், நீர்மோர், குளிர்பானம் வழங்கினர்.

    பங்குனி உத்திர விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா காத்தாயி அடிமை ப.சாமிநாதன் முனையதிரியர் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×