search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுவை மாநிலத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல்

    புதுவை மாநிலத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 38 ஆண்டுக்கு பிறகு 2006-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர்.

    அதன்பிறகு கடந்த 11 ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடந்தது. கடந்த ஆண்டு 2 முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தக்கோரி அரசியல்கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

    புதுவை அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சியினர் வழக்கை வாபஸ் பெற்றனர். இதனால் தேர்தல் நடத்துவதற்கான இடைக்கால தடை நீங்கியது. 

    இதையடுத்து மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது. பின்னர் நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியும் நடந்து வருகிறது.

    இதனிடையே தி.மு.க. அமைப்பாளர் சிவா, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த சில வாரத்துக்கு முன்பு விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு காலதாமதமின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது.

    இந்த வழக்கு இந்த மாதம் இறுதியில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற மே மாதம் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் தான் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவர். 
    இதை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
     
    பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளை தவிர்த்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடம், திருமண நிலையங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், தேர்தலுக்கான முதல்கட்ட மற்றும் ஆயத்த பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

    இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது புதுவை அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×