search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்பி வேலுமணி
    X
    எஸ்பி வேலுமணி

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை: 10க்கும் மேற்பட்ட வங்கிகளின் லாக்கர்களில் சோதனை நடத்த முடிவு

    லஞ்ச ஒழிப்பு சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கையாக வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 10 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் 3 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படை யில் தமிழகம் முழுவதும் 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடந்தது. இது தவிர கேரள எல்லையிலும் சோதனை நடைபெற்றது.

    கோவையில் எஸ்.பி. வேலுமணி வீடு, தொண்டாமுத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு, அவரது சகோதரர் அன்பரசன் வீடு, அறக்கட்டளை அலுவலகம், கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சேலம், திருப்பத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் சோதனை நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை 12 மணி நேரத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.

    கோவை உள்பட 59 இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய பணம் மற்றும் தங்கம் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ரூ.3.9 கோடி மதிப்பிலான 11.153 கிலோ தங்கம், ரூ.88.87 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கணக்கில் வராத ரூ.84 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சோதனை நடந்த இடங்களில் இருந்து செல்போன்கள், மடிக்கணினிகள், பல வங்கி லாக்கர் சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    மேலும் ரூ.34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கையாக வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் சாவிகளை கைப்பற்றியுள்ள போலீசார் முறைபடி வங்கிகளுக்கு தகவல் தெரிவித்து இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளனர்.

    வங்கி லாக்கர்களை திறந்து பார்த்து அதில் உள்ள ஆவணங்களை சரி பார்க்க உள்ளனர்.

    வங்கி லாக்கர்களில் நகை-பணம் ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் திறந்து பார்த்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கேட்டபோது 10-க்கும் மேற்பட்ட வங்கி லாக்கர் சாவிகளை பறிமுதல் செய்து இருப்பதாகவும், விரைவில் இந்த லாக்கர்களில் சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தனது வீட்டில் இருந்து நகை-பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, “இது வழக்கமான சோதனை தான். சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மேலும் தன்னுடைய வீட்டில் எந்தவிதமான பொருளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றவில்லை. கடந்த முறையும் கைப்பற்றவில்லை. ஆனால் நகை-பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இது தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×