search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயில்
    X
    வெயில்

    சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

    கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை 10 மணிக்கு பிறகு சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கோடை வெயில் அதிகமாகவே உள்ளது.


    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத தொடக்கத்திலேயே கோடைக்காலத்தின் தாக்கம் தெரிய தொடங்கி விடும்.

    ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் பனியின் தாக்கம் அதிகாலை நேரத்தில் அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரம் வரையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை 10 மணிக்கு பிறகு சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கோடை வெயில் அதிகமாகவே உள்ளது. இந்த வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் பொது மக்கள் வாடி வதங்கும் நிலை இப்போதே ஏற்பட தொடங்கி உள்ளது.

    குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது ஏப்ரல், மே மாதங்களில் அடிப்பது போன்று வெயிலின் தாக்கம் மார்ச் 2-வது வாரமான தற்போதே அதிகரித்துள்ளதால் அடுத்த 2 மாதங்கள் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    கோடை காலங்களில் எப்போதுமே சாலையோர கடைகளில் பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும்.

    தற்போது சாலையோர கடைகளில் தர்பூசணி பழங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த பழங்களை வாங்கி சாப்பிடுவதில் வாகன ஓட்டிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் அதிகளவில் மோர் வாங்கி சாப்பிடுவதையும் காண முடிகிறது. மார்ச் தொடங்கி ஜூன் 3-வது வாரம் வரையில் கோடைக் காலம் என்பதால் அடுத்த 3 மாதங்களும் இதே நிலை நீடிக்கும் என்று வானிலை மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, “இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது” என்றனர்.

    வெயிலின் தாக்கம் என்பது எப்போதுமே மார்ச் 3-வது வாரத்தில் இருந்தே அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    எனவே ஏப்ரல், மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் இதை விட அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் கோடை வெயிலை எதிர்கொள்ள மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

    கோடை காலத்தில் பலருக்கு வெயில் காரணமாக உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உடல் சூடு அதிகமாகி வயிற்று பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகளவில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்பானங்களை தவிர்த்து விட்டு பழச்சாறுகளை குடிப்பதன் மூலமும், பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமும் கோடை கால நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். சென்னையில் பழக் கடைகளில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து அனைத்து பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சூட்டை தணிக்கும் பழ வகைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்குகிறார்கள்.

    அந்த வகையில் தண்ணீர் சத்து அதிகமுள்ள கிர்ணி மற்றும் தர்பூசணி பழங்களுடன் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×