search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    கட்சியை வலுப்படுத்த அதிரடி திட்டங்கள்- கமல்ஹாசன் விரைவில் சுற்றுப்பயணம் செல்கிறார்

    வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என கட்சியினரை கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு அரசியலில் குதித்தார்.

    மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை அவர் தொடங்கினார்.

    கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து எதிர்கொண்டது. 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கமல் கட்சி வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள்.

    இந்த தேர்தலில் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். ஆனால் யாரும் வெற்றி பெறவில்லை. அதேநேரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பரவலாக ஓட்டுகளை பெற்றனர்.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி கவனம் ஈர்த்தது. தேர்தல் களத்தில் பேசப்படும் கட்சியாகவும் மக்கள் நீதி மய்யம் அப்போது திகழ்ந்தது.

    இதன்பிறகு கமல்ஹாசன் தொடர்ந்து தனது அறிக்கைகள் மூலமாக ஆட்சியாளர்களின் குறைகளை தெரிவித்துக் கொண்டே வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலை மக்கள் நீதி மய்யம் சந்தித்தது.

    இந்த தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு கமல்ஹாசன் கூட்டணி அமைத்து இருந்தார். ஆனால் தேர்தலில் யாரும் வெற்றி பெறவில்லை.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கமல் கட்சி தோல்வியை சந்தித்தது. இப்படி தொடர் தோல்விகளால் கட்சி நிர்வாகிகள் சற்று விரக்தி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அனைத்து ஊர்களிலும் கிளைகளை ஏற்படுத்தி கட்சி கொடியை பறக்க விட வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

    இதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை கட்சியின் மாநில நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    நகர் பகுதிகள் மற்றும் கிராம பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதத்தில் இன்னொரு திட்டத்தையும் கமல்ஹாசன் வகுத்து கொடுத்துள்ளார்.

    மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் முதல் கட்சி நம் கட்சியாகவே இருக்க வேண்டும் என்பது தான் அதுவாகும். இதன்படி கட்சி நிர்வாகிகள் அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைக்காக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகவே ரே‌ஷன் கடைகளுக்கு நேரில் சென்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மக்கள் பிரச்சினைகளை கேட்டு வருகிறார்கள்.

    அடுத்தடுத்து இதே போன்று மேலும் பல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான முரளி அப்பாஸ் கூறியதாவது:-

    மக்கள் பிரச்சினைகளுக்காக நமது குரல் எப்போதும் ஒலிக்க வேண்டும் என்பதில் எங்கள் தலைவர் கமல்ஹாசன் உறுதியுடன் இருக்கிறார். இதனை பலமுறை அவர் வலியுறுத்தி பேசி இருக்கிறார். வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ரே‌ஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். தினமும் இதுபோன்று தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சியினர் முன்நிற்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.

    இப்படி கட்சியை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி முதல் அரக்கோணம் வரை இந்த சுற்றுப்பயணம் இருக்கும். அப்போது கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளார்.

    கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அதிகமான பின்னர் சுற்றுப்பயண திட்டம் வெளியிடப்படும். தேர்தலில் வெற்றி தோல்வியை புறந்தள்ளிவிட்டு மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் எங்கள் தலைவர் உறுதியாக இருக்கிறார். இதன் மூலம் நிச்சயம் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகள், அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அறிக்கைகள் மற்றும் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் அதற்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×