search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நிலத்திற்கான சர்வே எண்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரம்

    தமிழக அரசு வருவாய்த்துறை சார்பில், விளைநிலங்களுக்கான இ-அடங்கல் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள நிலங்கள் 144 பிரிவுகளாக மாற்றப்பட்டு  ஒவ்வொன்றுக்கும் சர்வே எண்கள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால்  நகரப்பகுதியிலுள்ள சர்வே எண்கள் மற்றும் உரிமையாளர்களின் விபரங்கள் உள்ளிட்டவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாமல் இழுபறியாகி வந்தது. 

    இப்பணிகள் முழுமையடையாததால் தனியார் நிலங்கள் மற்றும் கட்டடங்களுக்கு நகர அளவை எண்கள் வழங்காமல் உள்ளதால் பட்டா மாறுதல், உட்பிரிவு, நில மாற்றம், நகல்கள் பெறுதல், பத்திர பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

    ஆன்லைன் வழியாக சர்வே எண் கொடுத்து பட்டா பெற முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது நகரிலுள்ள சர்வே எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால்  4 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

    இதுகுறித்து சர்வே துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    உடுமலை நகரில் 6,688 சர்வே எண்கள் முழுமையாக ‘ஆன்-லைன்’ பதிவேற்றம் செய்யப்படாமல் இழுபறியாகி வந்தது. தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வே எண்கள் ஆன்லைன் பதிவேற்றம் மற்றும் அதற்கான அனுமதி உத்தரவுகளை வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 

    புதிய மனைப்பிரிவுகள் உருவான பகுதிகள், பள்ளி, கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் என பிரச்சினைகள் இல்லாத நிலங்களின் சர்வே எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அவற்றை நேரடியாக ஆன்-லைன் வழியாக மக்கள் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டா மாறுதல், பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகளுக்கு நேரடியாக வருவாய்த்துறை இணைய தளம் வழியாக பெற முடியும்.

    இதில் பழைய டவுன் அரசு அலுவலகங்கள், நீர் நிலைப்புறம்போக்கு, அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் விரிவான ஆய்வு பணி நடந்து வருகிறது. அரசு நிலங்கள், தனியார் பெயருக்கு மாறி விடக்கூடாது என கவனமாக ஆய்வு செய்து அதற்குப்பின் அனுமதி கொடுக்கப்படும். 

    நகர சர்வே எண் பதிவேற்றும் பணி 60 சதவீதம் முடிந்து, 40 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது. இப்பணிகளும் ஒரு சில வாரங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு அடிப்படையில் நிறைவு பெறும். 

    அதற்குப்பின் தமிழக அரசு இணையதளத்தில் நேரடியாக பார்க்கும் வகையிலும், பதிவுத்துறையில் நில பரிமாற்றம் நடந்தால், உடனடியாக ஆன்லைன் வாயிலாக பட்டா மாறுதல் செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழக அரசு வருவாய்த்துறை சார்பில், விளைநிலங்களுக்கான இ-அடங்கல் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. மானியத்திட்டங்கள் உள்ளிட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஒவ்வொரு முறையும் விவசாயிகள், வி.ஏ.ஓ.,க்களை சந்தித்து, அடங்கல் சான்று பெற வேண்டியுள்ளது. 

    இப்பிரச்னைக்கு தீர்வாக இ-அடங்கல் திட்டத்தை செயல்படுத்தினால், சிட்டா பெறுவது போல அடங்கல் சான்றும் எளிதாக  விவசாயிகளுக்கு கிடைக்கும். 

    இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    Next Story
    ×