search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யுவராஜ்
    X
    யுவராஜ்

    சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை

    சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரும், நாமக்கல்லை சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

    அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் யுவராஜ் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 11.10.2015 அன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

    இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ந் தேதி விசாரணையும் நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கோகுல் ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணையை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு கடந்த 2019 மே 5-ந் தேதி முதல் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர் இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு கூறினார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கான தண்டனை 8-ந்தேதி (இன்று) அறிவிக் கப்படும் என நீதிபதி சம்பத் குமார் தெரிவித்தார். வழக்கில் தொடர்புடைய சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை யுவராஜ் உள்பட 10 பேரும் நீதிபதி சம்பத்குமார் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆஜராகி, தனது மகன் அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

    அரசு தரப்பு வக்கீல் மோகன் வாதாடுகையில், குற்றவாளிகள் 10 பேரும் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது சாட்சியங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

    குற்றவாளிகள் தரப்பு வக்கீல் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரடியாக ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எனவே 10 பேரையும் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இவை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்றார்.

    இதையடுத்து  தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதே போல் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் தலா ரூ.5ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×