search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிப்பு

    நூல் விலை உயர்வால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    நூல் விலை உயர்வால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.


    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வார சந்தை கடைகளும் செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் க்கிழமை மாலை வரை நடைபெரும்.

    இந்த வார சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை  போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.  
    சந்தை நாட்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். விசேஷ நாட்களில் கூடுதலாக வர்த்தகம் நடைபெறும். கொரோனா தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங் களால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் மாசி மாதம் தொடங்கியதால் கோவில், திருமண விசேஷங்கள் காரணமாக வியாபாரம் ஓரளவு குறிப்பாக நடந்தது. கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் பஞ்சு நூல் விலை ஏற்றம் காரணமாக ஜவுளிகள் விலை சற்று அதிகரித்தது.

     
    இதனால் இந்த வாரம் ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப் பட்டது. போனவாரம் காட்டிலும் இந்த வாரம் ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து விற்கப்பட்டது. போனவாரம் 90 ரூபாய்க்கு விற்ற லுங்கி இந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்பனை யானது. போன வாரம் ரூ.80 ரூபாய்க்கு விற்ற புடவை இந்த வாரம் ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது. சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்தது.
    இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    பஞ்சு நூல் விலை ஏற்றம் காரணமாக கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் துணிகள் விலை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இன்று கூடிய சந்தையில் மொத்த வியாபாரம் 25 சதவீதம் மட்டுமே நடந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    இதேபோல் சில்லரை வியாபாரம் 30 சதவீதம் மட்டுமே நடந்தது. முன்பு ஜவுளி சந்தை கூடினால் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் தற்போது வெறும் ரூ.60 லட்சம் வரை மட்டுமே வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    நூல் விலை ஏற்றத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மாதமாதம் நூல் விலை ஏற்றத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு இருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×