search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் பெய்த மழையில் பள்ளி மாணவர்கள் குடைபிடித்தபடி செல்வதை படத்தில் காணலாம்
    X
    உடன்குடி பகுதியில் பெய்த மழையில் பள்ளி மாணவர்கள் குடைபிடித்தபடி செல்வதை படத்தில் காணலாம்

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பரவலாக மழை

    திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியான காயல்பட்டினம், மெஞ்ஞானபுரம், ஆத்தூர், ஆறுமுகநேரி, ஏரல், மாரமங்கலம், பழையகாயல் ஆகிய பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    தென்தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சியால் 2 நாட்கள் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்திலும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    தூத்துக்குடியில் அதிகாலையில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. அங்கு 18 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இதுபோல திருச்செந்தூரிலும் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. அதைத்தொடர்ந்து காலை 9 மணி வரை சாரல்மழை பெய்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியான காயல்பட்டினம், மெஞ்ஞானபுரம், ஆத்தூர், ஆறுமுகநேரி, ஏரல், மாரமங்கலம், பழையகாயல் ஆகிய பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது.

    திருச்செந்தூரில் மட்டும் அதிகபட்சமாக இன்று காலை 8 மணி வரை 19 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. காயல்பட்டினத்தில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்தது.

    சில இடங்களில் லேசாக சாரல்மழை தூறியது. களக்காடு பகுதியில் 2.2 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு 1.2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டதில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. இன்னும் ஏராளமான நெற்பயிர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அறுவடை செய்வதற்காக தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இன்று பல இடங்களில் மழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

    சில பகுதிகளில் அறுவடைகள் மழையினால் நிறுத்தப்பட்டுள்ளன.

    தொடர்ந்து மழை பெய்தால் அறுவடை பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு அறுவடை செய்ய முடியாமல் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு இன்று விநாடிக்கு 39 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் 100.30 அடியாக உள்ளது.

    பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 196.88 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அணைநீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 84.09 அடியாக உள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. நீர்மட்டமும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. ராமநதியில் 27 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. அடவிநயினார் அணையில் 32.25 அளவுக்கே நீர்மட்டம் குறைவாக உள்ளது.

    தற்போது கோடைகாலம் என்பதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடைவெப்பம் அதிக அளவு இருக்காது என்றும் குறைவாகவே காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×