search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்ரைனின் தவித்த இந்திய மாலுமிகள்.
    X
    உக்ரைனின் தவித்த இந்திய மாலுமிகள்.

    உக்ரைனின் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த நெல்லை மாலுமி மேலும் 73 பேருடன் பத்திரமாக மீட்பு

    மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மாணவர்களை மீட்க தேவையான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    நெல்லை:

    ரஷியா போர் காரணமாக உக்ரைனில் வசிக்கும் மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் அங்கு மருத்துவம் படித்து வந்த நிலையில் தொடர் போரின் காரணமாக அங்கிருந்து பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டு வரப்படுகின்றனர்.

    இதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மாணவர்களை மீட்க தேவையான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில் உக்ரைனுக்கு சரக்குகளை கையாளுவதற்காக கப்பலில் சென்ற தமிழகத்தை சேர்ந்த 2 மாலுமிகள் உள்பட சுமார் 74 இந்தியர்கள் போரினால் கருங்கடலில் தவித்தது தெரியவந்துள்ளது.

    கடந்த மாதம் 22-ந்தேதி உக்ரைனுக்கு சுமார் 5 கப்பல்கள் 74 இந்திய மாலுமிகளுடன் சென்றது. அப்போது அங்கு எந்தவிதமான போர் சூழலும் இல்லை. இந்நிலையில் அங்கு ரஷியா திடீரென போர் தொடுக்க ஆரம்பித்ததால் கடல் வழிகள் மூடப்பட்டன.

    இதனால் மைகோலைவ் பகுதியில் நெல்லையை சேர்ந்த ஒரு மாலுமி உள்பட 74 இந்திய மாலுமிகள் சென்ற 5 கப்பல்கள் நடுக்கடலில் நின்றது. அதில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருங்கடல் பகுதியை ரஷியா நெருங்கி வந்தது.

    இதையடுத்து நெல்லை மாலுமி உள்பட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 21 மாலுமிகள் தாங்கள் பணிபுரியும் சன் அக்வா மரைன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

    தொடர்ந்து அந்த குழுவினர் இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக இந்திய தூதரகம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது.

    அதே நேரத்தில் சன் அக்வா மரைன் நிறுவனத்தினர் மாலுமி குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    மேலும் 5 கப்பல்களையும் நடுக்கடலில் விட்டு விட்டு பஸ்சில் ஏறி வருமாறு அறிவுறுத்தியதன்பேரில் மாலுமிகள் 74 பேரும் அங்கிருந்து மால்டோவா துறைமுகத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

    இதையடுத்து 3 பஸ்களில் 45 இந்திய மாலுமிகள் மற்றும் சில வெளிநாட்டு மாலுமிகள் மீட்டு அழைத்து வரப்பட்டனர். கருங்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 21 மாலுமிகளில் 2 பேர் தமிழர்கள். அதில் ஒருவர் நெல்லை மாலுமி என்பது அதன்பின்னரே தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் அனைவரும் மால்டோவாவிற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வேறு பஸ்சில் புக்காரஸ்ட்டுக்கு இன்று அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

    இதுகுறித்து நெல்லையை சேர்ந்த மாலுமி கூறுகையில், அங்கு போர்சூழல் பயங்கரமாக உள்ளது. துறைமுகத்தை அவர்கள் நெருங்காவிட்டாலும் அங்கிருந்த மாலுமிகள் ரஷியா-உக்ரைன் போரை நேரடியாக கண்டோம்.

    வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகனை தாக்குதலினால் அதில் இருந்த ஒரு மாலுமி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் எங்களுக்கு பயம் அதிகமானது. உடனடியாக அங்கிருந்து வெளியேற முடிவு செய்துவிட்டோம் என்றார்.

    இதையும் படியுங்கள்...  அஸ்வின் 500 விக்கெட் எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை - கபில்தேவ்

    Next Story
    ×