என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓ பன்னீர்செல்வம்
  X
  ஓ பன்னீர்செல்வம்

  அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு- ஓ.பன்னீர்செல்வம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்து கட்சியை நடத்தும்போது எதற்கு சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.
  சென்னை:

  தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

  2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆட்சியை இழந்தது. அடுத்து நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தோல்வி, இப்போது நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி என அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்வியால் அ.தி.மு.க.வில் தொண்டர்கள் சோர்வடைந்து வருகின்றனர்.

  அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரட்டை தலைமை இருப்பதால்தான் சரியான முடிவை எடுக்க முடியாமல் தலைமை திணறுவதாகவும் ஒற்றைத் தலைமை வந்தால்தான் கட்சி வீறுநடை போடும் என்றும் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

  ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இன்னும் தனித்தனியாகவே செயல்படுவதாகவும், இணைந்து செயல்படாததால்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியை சந்தித்ததாகவும் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  இந்த கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வமே தலைமை தாங்கினார். தேனி மாவட்டத்தை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினார்கள்.

  இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்தனர்.

  இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதே கட்சி தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. என்றும் அதற்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்து வருவதாக கூறினார்.

  இது சேலத்தில் இருந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்ததும் நேற்று கடும் எரிச்சல் அடைந்தார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தக்க வைக்கும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சசிகலா பிரச்சினை தேவை தானா என்று ஆவேசம் அடைந்தார்.

  இந்த நிலையில் கோவை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாகவே பேட்டி அளித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மூலம் பேட்டி கொடுக்க செய்து சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க கூடாது என்று சொல்ல வைத்தார்.

  அது மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலமும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேச வைத்தார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வத்திடம் போனில் பேசியதாக தெரிகிறது.

  சசிகலாவை கட்சியில் சேர்க்கும் பிரச்சினையை இப்போது ஏன் பேச வேண்டும். பல மாவட்டங்களில் சசிகலாவை சேர்க்க வேண்டாம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எனவே இப்போது சசிகலா தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

  எடப்பாடி சொன்னதை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் அதன் பிறகு அமைதியாகி விட்டார்.

  அதுமட்டுமல்ல பெரிய குளத்தில் நாளை நடைபெற இருந்த அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தையும் ரத்து செய்து விட்டார்.

  எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் பார்த்தும் பேசினார். இதேபோல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  சசிகலாவை சேர்க்க பல மாவட்டங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓ.பன்னீர் செல்வம் தற்போது அமைதியாகி விட்டார்.

  இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்து கட்சியை நடத்தும்போது எதற்கு சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று எதிர்கேள்வி எழுப்பினர்.

  ஒற்றைத் தலைமை வந்தால்தான் அ.தி.மு.க. கட்சிக்கு நல்லது. அதற்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இருவரில் யாராவது விட்டு கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

  ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி போனில் பேசியதால் அவர் சமரசம் அடைந்து விட்டதாகவும் சசிகலா பிரச்சினை இனி விஸ்வரூபம் எடுக்காது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.  Next Story
  ×