search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஐஏ சோதனை
    X
    என்ஐஏ சோதனை

    விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைதான 4 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

    இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.42 கோடியை விடுதலை புலிகள் இயக்கத்துக்கு சொந்தமான வங்கி கணக்குக்கு அவர் மாற்ற முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    இலங்கையில் தனிநாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் அமைப்பினருடன் நடந்த போரில் இலங்கை ராணுவத்தால் அந்த அமைப்பு வீழ்த்தப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

    ஆனால் விடுதலை புலிகள் அமைப்பினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், அவர்கள் ஒன்றாக இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டப்பட்டு வருவதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வந்தது.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்தில் வைத்து லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

    இலங்கையை சேர்ந்த அவருடன் தொடர்பில் இருந்த கென்னிங்ஸ்டன் பெர்னான்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சென்னையை சேர்ந்த மோகன் என்பவரும் கைதானார். இவரை தவிர மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு வங்கிகள் மூலமாக நிதி திரட்டி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ கடந்த 2018-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து சென்னை வந்ததும், அண்ணாநகரில் வாடகை வீட்டில் தங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த முகவரியை வைத்து மேரி பிரான்சிஸ்கோ போலியான ஆதார் அட்டை, ரே‌ஷன்கார்டு, இந்தியன் பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கி இருப்பதும் வெளிச் சத்துக்கு வந்தது.

    இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    மேரி பிரான்சிஸ்கோ சென்னையில் இருந்து மும்பை செல்வதற்கு திட்டமிட்டபோதுதான் கைது செய்யப்பட்டார்.

    இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.42 கோடியை விடுதலை புலிகள் இயக்கத்துக்கு சொந்தமான வங்கி கணக்குக்கு அவர் மாற்ற முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை தாண்டி இந்த வழக்கில் வேறு வி‌ஷயங்கள் எதுவும் தெரியாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டப்பட்ட வழக்கில் மேலும் பல தகவல்களை சேகரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக இலங்கை பெண்ணுடன் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    விடுதலை புலிகள் அமைப்பினர் எங்கெல்லாம் பதுங்கி இருக்கிறார்கள்? அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருவது யார்? யார்? என்பது போன்ற கேள்வி களை கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதன் முடிவில் விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டப்பட்ட வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×