search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்ரைனில் சிக்கிய மாணவியின் குடும்பத்திற்கு அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ ஆறுதல்.
    X
    உக்ரைனில் சிக்கிய மாணவியின் குடும்பத்திற்கு அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ ஆறுதல்.

    உக்ரைனில் சிக்கியுள்ள திருவாரூரை சேர்ந்த 2 மாணவர்களை மீட்க முதல்வருக்கு கோரிக்கை

    உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள நன்னிலம், திருவாரூரை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டும் என முதல்வருக்கு காமராஜ் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார் முகமது மகன் ஜெயினுல் ஆரிப் மற்றும் குடவாசல் அடுத்த விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மகள் அபிராமி ஆகியோர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர் சிட்டியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

    தற்போது உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இவர்கள் கல்லூரியினுடைய விடுதியின் பாதாள அறைகளில் தங்கி உள்ளனர். இந்நிலையில் மாணவி அபிராமி, முதல்வர் மற்றும் இரா.காமராஜ் எம்.எல்.ஏ ஆகியோருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து விஷ்ணுபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இரா.காமராஜ் எம்.எல்.ஏ சென்று மாணவியின் பெற்றோர் வைத்தியநாதன் மற்றும் புனிதா ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மாணவி அபிராமியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசினார்.

    அப்போது அந்த மாணவி, தாங்கள், கல்லூரி விடுதியில் உள்ள 40 பேர் ஒரு சிறிய அறையில் தங்கியிருப்பதாகவும், குடிநீர் மற்றும் உணவு தீர்ந்து விடும் என்றும், எப்படியாவது காப்பாற்றி தமிழகத்திற்கு அழைத்து செல்லுமாறு உருக்கமாகக் தெரிவித்தார்.

    இதுபோல் உக்ரைன் நாட்டில் 500க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களும், இந்தியாவை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ&மாணவிகள் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள மாணவ&மாணவிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும் மாணவியிடம் இரா.காமராஜ் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பாதுகாப்பு நல ஆணைய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு மாணவி அபிராமி, மாணவன் ஜெயினுள்ஆரிப் உள்ளிட்ட மாணவ மாணவிகளை பத்திரமாக மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது, உக்ரைன் நாட்டில் நன்னிலம் மற்றும் திருவாரூரை சேர்ந்த 2 மாணவ மாணவிகள் சிக்கி இருப்பதை அறிந்து அவர்களது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன்.

     இது சம்பந்தமாக முதல்வரின் செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன், இந்தியா அழைத்து வருவது குறித்து பேசி இருக்கிறேன். உடனடியாக இத்தகைய மாணவ&மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் மாணவன் ஜெயினுள் ஆரிப் வீட்டிற்கும் சென்று அவரது பெற்றோரிடமும் ஆறுதல் தெரிவித்தார். குடவாசல் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்ராஜ், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×