search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நீதி மய்யம்
    X
    மக்கள் நீதி மய்யம்

    கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி வார்டுகளில் டெபாசிட் இழந்த மக்கள் நீதி மய்யம்

    உள்ளாட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியால் இனி வரும் எதிர்கால தேர்தல்களை எண்ணி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் முதன்முதலாக கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் மயிரிழையில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும், கமல்ஹாசன் 51,481 வாக்குகளும் பெற்றனர். 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.

    இதனால் கோவை தெற்கு தொகுதியை தங்களுக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாக மக்கள் நீதி மய்யம் பார்த்து வந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கருதினர்.

    இதனால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோவை மாநகராட்சி 63, 64, 66, 67, 68, 69, 70, 80, 81, 82, 83 ஆகிய 11 வார்டுகளில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர ஆர்வம் காட்டினர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இந்த 11 வார்டுகளிலும் மிகக்குறைவான வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். மேலும் ஒரு வார்டில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை.

    இந்த 11 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 5,619 வாக்குகளையே அவர்களால் பெற முடிந்தது. கமல்ஹாசன் கோவைக்கு நேரில் வந்து தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அந்த பிரசாரத்துக்கும் பலன் இல்லாமல் போனது தோல்வி அடைந்த வேட்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளை பெற்றிருந்தது. அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியிலும் அந்த கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். பல வார்டுகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் 500-க்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 81-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் 983 வாக்குகள் பெற்று உள்ளார்.

    உள்ளாட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியால் இனி வரும் எதிர்கால தேர்தல்களை எண்ணி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    Next Story
    ×