search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்கு எண்ணிக்கை மையமான திருப்பூர் சிக்கண்ணா  கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    வாக்கு எண்ணிக்கை மையமான திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

    திருப்பூர் மாநகராட்சியில் 56.51 சதவீதம் ஆண்களும், 54.28 சதவீதம் பெண்களும் மற்றும் 18.72 சதவீதம் திருநங்கைகளும் என மொத்தம் 55..40 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. திருப்பூர் மாநகராட்சியில் 3,66,483 ஆண்கள், 3,56,474 பெண்கள், 203 திருநங்கைகள் என மொத்தம் 7,23,160 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,07,116 பேர், பெண்கள் 1,93,482 பேர், திருநங்கைகள் 38 பேர் என மொத்தம் 4,00,636 பேர் வாக்களித்து உள்ளனர்.

    திருப்பூர் மாநகராட்சியில் 56.51 சதவீதம் ஆண்களும், 54.28 சதவீதம் பெண்களும் மற்றும் 18.72 சதவீதம்  திருநங்கைகளும் என மொத்தம் 55..40 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.  வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன்  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

    வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் சிக்கண்ணா கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையாளர்  கிராந்திகுமார் தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறைகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன.  நுழைவுவாயில்  வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை என 3 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. போலீசார், வேட்பாளர்களின் முகவர்கள் தவிர வேறு யாரும் கல்லூரிக்குள் செல்ல அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×