என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிமுக-பாஜக தலைவர்கள்
  X
  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிமுக-பாஜக தலைவர்கள்

  அதிமுக-பாரதிய ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை: 2 மேயர் பதவி உள்பட கூடுதல் இடம் கேட்டு வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் சுதாகர் ரெட்டி, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  சென்னை:

  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

  இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி இடையே மீண்டும் நேரடி பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கி உள்ளன.

  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பிரதானமாக உள்ளன. இந்த கட்சிகள் இடையே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

  ஓரிரு நாட்களில் இந்த பணிகளை முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிப்பதற்கு தி.மு.க. தயாராகி வருகிறது. அதே போன்று அ.தி.மு.க. கூட்டணியிலும் வார்டுகளை கூட்டணி கட்சிகளுடன் பிரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  கூட்டணி விவகாரம், தேர்தலை சந்திப்பது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

  கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் பா.ஜனதா கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா சார்பில் வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  இதில் கலந்து கொண்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசுகையில், அ.தி.மு.க. முதுகெலும்பு இல்லாத கட்சி என்றும் பா.ஜனதாதான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்றும் கூறி இருந்தார்.

  அவர் இவ்வாறு விமர்சித்தது அ.தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். போராட்ட மேடையில் அமர்ந்திருந்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உடனடியாக நயினார் நாகேந்திரனை கண்டிக்கவில்லை. மாறாக டெல்லியில் இருந்து கண்டித்த பிறகுதான் அண்ணாமலையும் கண்டித்தார். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா தேவையில்லை என்று அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

  பாஜக


  ஆனால் கூட்டணியில் இருந்து இந்த காரணத்தை வைத்து பா.ஜனதாவை கழட்டி விடுவது சரியாக இருக்காது என்று மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  ஏற்கனவே பா.ஜனதா தரப்பில் 30 சதவீத இடம் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு இடங்களை கொடுக்க அ.தி.மு.க. தயாராக இல்லை.

  எனவே இடஒதுக்கீடு பேச்சுவார்த்தையின்போது 30 சதவீத இடங்களை கேட்டு பா.ஜனதா பிடிவாதம் செய்தால் அதை காரணமாக வைத்து பா.ஜனதாவை கழட்டி விட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  இதற்கிடையில் பா.ஜனதா மாவட்ட தலைவர்களுடன் நேற்று அண்ணாமலையும் ஆலோசனை நடத்தினார்.

  காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. அப்போது மாவட்ட தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது சில மாவட்ட தலைவர்கள் தனித்து போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

  சிலர் 30 சதவீதத்துக்கு குறையாமல் இடங்களை வாங்க வேண்டும். பா.ஜனதா வலிமையாக இருக்கும் நாகர்கோவில், கோவை மாநகராட்சி மேயர் பதவிகளையும் கேட்டு பெற வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

  அதே நேரம் தனித்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை சந்திக்க தயாராக இருக்கும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியலையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

  2-ம் நாளாக இன்று பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் கமலாலயத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இதில் சுதாகர் ரெட்டி, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளிலும் 2 நாட்களாக நடைபெற்ற அனல் பறந்த ஆலோசனை கூட்டம் முடிவுக்கு வந்தது.

  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் சுதாகர் ரெட்டி, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பகல் 12.40 மணியளவில் சென்றனர்.

  அங்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.

  இந்த சந்திப்பின்போது 2 மேயர் பதவிகள் உள்பட கூடுதல் வார்டுகளை பா.ஜனதா தரப்பில் கேட்டு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

  ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியது.

  முதலில் த.மா.கா. சார்பில் அ.தி.மு.க. குழுவினருடன் பேசினார்கள். அப்போது த.மா.கா. போட்டியிட விரும்பும் வார்டுகளின் பட்டியல் விவரத்தை வழங்கினார்கள்.

  பா.ஜனதாவுடன் கூட்டணி வார்டு பிரிப்பு பற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

  கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில்தான் இரு கட்சி தலைவர்களும் இன்று சந்தித்து பேசிக்கொண்டனர்.

  ஏற்கனவே அனைத்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கும் கூட்டணி கட்சிகளிடம் எவ்வாறு பேச வேண்டும் என்றும் வார்டுகள் பிரிப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

  அந்தந்த மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வார்டுகளை சுமூகமாக பேசி முடிவு செய்வார்கள்.

  பெரும்பாலும் 1-ந்தேதி அல்லது 2-ந்தேதிக்குள் மாவட்ட வாரியாக கூட்டணி கட்சிகளின் வார்டு பட்டியல்கள் வெளியாகி விடும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இது தொடர்பாக மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜனதா குழுவினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

  கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தேசிய கட்சியாக இருப்பதால் கூட்டணி தொடர்பான முடிவுகளுக்கு டெல்லி தலைமையின் ஒப்புதல் தேவை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து வார்டு ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.


  Next Story
  ×