search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பேபி அணையை வலுப்படுத்துவதற்கு மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும்- ராமதாஸ்

    முல்லைப் பெரியாறு பாதுகாப்பு ஆய்வுக்கு முன் பேபி அணையை வலுப்படுத்துவதற்கு மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்மட்ட அளவு 152 அடியாகவே இருந்து வந்தது. 1979-ம் ஆண்டில் அணையின் வலிமை குறித்து கேரள அரசு ஐயங்களை எழுப்பியதால் அணையின் நீர்மட்டத்தை அப்போதைய தமிழக அரசு, முதலில் 142 அடியாகவும், பின்னர் 136 அடியாகவும் குறைத்தது.

    அதன் பின்னர் அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பேபி அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு 152 அடியாகவும் உயர்த்தலாம் என்று 2006-ம் ஆண்டிலும், 2014-ம் ஆண்டிலும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அணையை வலுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.

    கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், பேபி அணையையும், மண் அணையையும் வலுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாதது தான் அதற்குக் காரணம். பேபி அணைக்கு அருகில் உள்ள 15 மரங்களை வெட்டினால் தான் அந்தப் பகுதியில் பேபி அணையை வலுப்படுத்த முடியும். அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அளவுக்கு கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் அதை கேரள அரசு செய்யவில்லை. காரணம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை கேரள அரசு விரும்பவில்லை.

    இத்தகைய சூழலில் அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தப்பட்டால், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.

    அறிவியல்பூர்வ ஆய்வு முடிந்த பிறகு அணையை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் கூட, அதன்பிறகு அணை 152 அடி நீர்மட்டத்தை தாங்குமா? என்பதை உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகிவிடும். முல்லைப் பெரியாறு சிக்கல் அவ்வளவு காலம் நீடிக்கக்கூடாது.

    மாறாக, பேபி அணையை வலுப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டால், ஓராண்டிற்குள் அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்து விடும். அதன்பிறகு அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அணை வலிமையாக உள்ளதா? அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாமா? என்ற இரு வினாக்களுக்கும் விடை கிடைத்து விடும். அதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டு விடும்; முல்லைப் பெரியாறு சிக்கலும் நிரந்தரமாக தீர்ந்து விடும்.

    எனவே, பேபி அணைப் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட முதலில் அனுமதிக்க வேண்டும்; பேபி அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு தான், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும். அதன்மூலம் முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 152 அடியாக முன்கூட்டியே உயர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×