search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளையை கொன்ற நண்பரை பிடிக்க 2 தனிப்படை

    கன்னியாகுமரி அருகே மதுபோதை தகராறில் புது மாப்பிள்ளையை தீர்த்து கட்டிய நண்பரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சகாயமாதா தெருவை சேர்ந்தவர் பீட்டர்.இவரதுமகன் கவாஸ்கர் (வயது 34), மீனவர். இவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் கவாஸ்கர் கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த தனது நண்பர் இருதய ஜோன்ஸ் ராஜா (35) மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அறை எடுத்து கஞ்சா அருந்திவிட்டு மதுகுடித்ததாக கூறப்படுகிறது. இதில் போதையில் இருந்த கவாஸ்கருக்கும் இருதயஜோன்ஸ் ராஜாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த இருதயஜோன்ஸ் ராஜா “திடீர்”என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவாஸ்கரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதையடுத்து இருதயஜோன்ஸ் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது கவாஸ்கரின் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் வழக்குப்பதிவு செய்து இருதயஜோன்ஸ் ராஜாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இருதயஜோன்ஸ் ராஜாவை பிடிக்க கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இருதயஜோன்ஸ் ராஜாவை தேடி வருகிறார்கள். கொலையாளி இருதய ஜோன்ஸ் ராஜா வீட்டுக்கு செல்லாமல் அந்தப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி வந்ததாகவும் அங்கு வைத்து மது போதையில் கவாஸ்கருடன் ஏற்பட்ட தகராறில் தான் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×