search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது விடுதலை சிறுத்தை கட்சிக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருப்பதாக திருமாவளவன் கூறினார்.
    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளதால் கணிசமான இடங்களில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது.

    இதற்காக தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்ட வார்டுகளை ஒதுக்கி தருமாறு பட்டியல் கொடுத்துள்ளனர்.

    அந்த பட்டியலில் உள்ள வார்டுகளில் எந்தெந்த வார்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கணிசமான வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்றும் இது சம்பந்தமாக அந்தந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தை முடிந்ததும் திருமாவளவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புத்தாண்டு பிறந்த பின்னர் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

    அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் ஆங்காங்கே தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    இது சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆங்காங்கே முன்னணி பொறுப்பாளர்கள் தேவையான வார்டுகளை பட்டியலிட்டு தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்துள்ளனர்.

    இதுபற்றி இன்று நாங்கள் பேசும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போதுமான இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது விடுதலை சிறுத்தை கட்சிக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றில் 50 சதவீதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. இது பெண்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கவுன்சிலர் தேர்தலுக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கவனத்தில் கொண்டு எங்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என பொதுவாக வலியுறுத்தி உள்ளோம்.

    முக ஸ்டாலின்

    தேர்தல் முடியட்டும் கவனத்தில் வைத்து கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    குறிப்பாக நாங்கள் எந்த தலைவர் பதவியையும் கேட்கவில்லை. மேயர், நகராட்சி தலைவர் பதவிகள் பற்றி பேசவில்லை.

    தற்போதைய சூழலில் தேர்தல் முடிந்து கூட்டணி சார்பில் போதிய அளவிலான கவுன்சிலர்கள் வெற்றி பெற்றால்தான் அந்த பதவியை பெறுவதற்கான போட்டியில் இறங்க முடியும்.

    அப்போதுதான் இதுபற்றி விரிவாக பேச முடியும். ஆனாலும் 2006-ல் கலைஞர் காலத்தில் எங்களுக்கு கடலூர் நகராட்சி துணைத் தலைவர் பதவி, நெல்லிக்குப்பம் நகராட்சியில் தலைவர் பொறுப்பு, பாப்பிரெட்டிபட்டி, செந்துறை யூனியன், ஆகியவற்றில் ஒன்றிய பெருந்தலைவர் பதவி வழங்கியதை நாங்கள் நினைவுபடுத்தினோம்.

    இந்த தேர்தலிலும் முடிந்த அளவுக்கு கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளோம்.

    எங்களது பேச்சுவார்த்தை முடிந்ததும் 1-ந் தேதிக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×