search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- நாகர்கோவிலில் 6 இடங்களில் மனுதாக்கல் செய்த வேட்பாளர்கள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்ற 6 இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு வேட்பாளர்கள் மனுதாக்கல் முழுவதும் கண்காணிக்கப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் பெறப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் போட்டியிடுபவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் 6 இடங்களில் வார்டுகள் வாரியாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. 1 முதல் 9 வார்டுகளுக்கு முதல் தளத்தில் உள்ள வருவாய் அலுவலர் அறையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சுஜின் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    10 முதல் 18 வார்டுகளுக்கு முதல் தளத்தில் உள்ள நகரமைப்பு அலுவலர் அறையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    19 முதல் 27 வார்டுகளுக்கு முதல் தளத்தில் உள்ள பொறியாளர் அறையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    28 முதல் 36 வார்டுகளுக்கு முதல் தளத்தில் உள்ள நகர் நல அலுவலர் அறையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக விஜய்சந்திரன் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    37 முதல் 44 வார்டுகளுக்கு தரை தளத்தில் உள்ள மேலாளர் அறையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக விஜயலெட்சுமி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    45 முதல் 52 வார்டுகளுக்கு முதல் தளத்தில் உள்ள சுகாதார அதிகாரி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    முதல் நாளான இன்று ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டிய இடம் தொடர்பான அறிவிப்பு பலகை மாநகராட்சி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மாநகராட்சி அலுவலகத்திற்குள் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து போலீசார் அவர்களை அனுமதித்தனர். மற்றவர்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுமதிக்கவில்லை.

    வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மற்றும் அவருடன் மேலும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். முதல் நாளான இன்று மதியம் வரை தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

    நாகர்கோவில் மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்ற 6 இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு வேட்பாளர்கள் மனுதாக்கல் முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

    கொல்லங்கோடு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இங்கு வேட்பு மனுக்கள் கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்டது. 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

    குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சியிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு நகராட்சியிலும் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சி அலுவலகங்களிலும் இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு பேரூராட்சியிலும் 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பேரூராட்சி அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    வேட்புமனு தாக்கல் வரும் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதை தொடர்ந்து 5-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற 7-ந்தேதி கடைசி நாளாகும். 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து வருகிற 22-ந்தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற விவரம் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×