search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 தினங்களில் வெளியிடப்படும்- கே.எஸ்.அழகிரி

    காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடக்கிறது.

    இதில் மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 4-ந்தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

    வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தல், இடங்கள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் அவரவர் பகுதியில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரை உள்ள வார்டுகள் எண்ணிக்கை, வேட்பாளர்கள் தேர்வு நிலவரங்கள் பற்றி கேட்டறிந்தார். அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால் ஆகியோர் இடம் பங்கீடு பற்றி பேச்சு நடத்த வந்தனர். சுமார் 15 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயம் வந்த போது எடுத்த படம்.


    அதைத் தொடர்ந்து இடப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்றனர்.

    அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காங்கிரசுக்கு 3 மேயர் பதவிகள் வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 21 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. எனவே ஒரு தொகுதிக்கு ஒரு இடம் வேண்டும் என்பது உள்பட தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பும் இடங்கள் பற்றி தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் வார்டு பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    காங்கிரஸ் தோழர்கள் விருப்பப்பட்டு கேட்கும் இடங்களை தி.மு.க.விடம் கேட்டு பெறுவோம். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மாவட்ட அளவில் 3 தினங்களில் வெளியிடப்படும். பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறும்போது, ‘எங்கள் கட்சியின் வலிமையை பொறுத்து இடங்கள் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். சென்னையில் 2 வார்டுகள் கேட்டுள்ளோம்’ என்றார்.

    Next Story
    ×