search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - முத்தரசன்

    தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார்.
    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த முயற்சித்த அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகள் நிர்வாகம் காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தார்கள். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நேரடியாக தங்களது கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிப்பார்கள். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை போல் உள்ளாட்சி தேர்தலும் முக்கியமானது.

    தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள்.

    முக ஸ்டாலின்

    வகுப்புவாத சக்திகள், அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் வெற்றி பெறக்கூடாது. அ.தி.மு.க.தோலில் பா.ஜனதா ஏறி அதனை பலிகடா ஆக்கி வெற்றி பெற வைக்கிறது.

    நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசினார். மறுநாளே பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்ததோடு அ.தி.மு.க. சிறந்த எதிர்கட்சியாக உள்ளது என கூறியுள்ளார். அவர்கள் உறவு சுமூகமானதாக இல்லை.

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பால், பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றியுள்ளது.

    மதசார்பற்ற கொள்கையில் தி.மு.க. உறுதியுடன் உள்ளது. மாநில உரிமைகளுக்காக போராடி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசு அனைத்து அதிகாரமும், எங்களுக்கே என நினைப்பது உரிமைமீறல் ஆகும். இதுநாட்டின் ஒருமைப் பாட்டை சீர்குலைக்கும்.

    இந்தியா சொந்தகாலில் நிற்க நேரு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக் கினார். ஆனால் மோடி அரசு அவற்றை விற்று வருகிறது.

    ஏர் இந்தியா நிறுவனத்தை வெறும் 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்துள்ளது. ரெயில்வேதுறை, வங்கி, இன்சூரன்ஸ் ஆகியவை தனியார் மயமாகி வருகிறது. மக்கள் நலனை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனே முக்கியம் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை தெரியாது என்று கூறியது கண்டிக்கத்தக்கது.

    மதச்சார்பற்ற தன்மை, அரசியல் அமைப்பை காக்க வருகிற 23,24-ந் தேதிகளில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர்கள் இசக்கிதுரை, அழகுமுத்துபாண்டி, ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் சடை யப்பன் ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×