search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கீரை - காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    காலிபிளவர் சாகுபடிக்கு மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும்.
    குடிமங்கலம்:

    உடுமலை, தளி, அமராவதி பகுதியில் கிணறு, ஆழ்குழாய் கிணறு நீராதாரமாக கொண்டு கத்தரி, வெண்டை, தர்பூசணி, வெள்ளரி, அவரை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

    ஒரு சில விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுடன் சேர்த்து சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலை, சுக்குட்டிக்கீரை, தண்டங்கீரை போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    அவற்றை பராமரிப்பு செய்து நோய்களிலிருந்தும் பாதுகாத்து வருகின்றனர். இதனால் கீரைச்செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையின் தயவால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் பயிர்களும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வளர்ந்து வருகிறது. 

    இதனால் கூடுதல் விளைச்சலும் வருமானமும் கிடைப்பதால் விவசாயிகள் முழு நேரமாக காய்கறி மற்றும் கீரை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி காய்கறிகள் மற்றும் கீரைவகைகள் சாகுபடியால் கூலி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒருசில விவசாயிகள் சிறந்த லாபம் தரக்கூடிய காலிபிளவர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    காலிபிளவர் சாகுபடிக்கு மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும். எனவே அனுபவ விவசாயிகள் அல்லது தோட்டக்கலைத்துறையினரின் வழிகாட்டலை பெற்று காலிபிளவர் சாகுபடியில் ஈடுபடுவது இழப்பை தவிர்ப்பதற்கான வழியாகும். 

    சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக் கூடியது மற்றும் கால்சியம் சத்து அதிகம் கொண்டது என்ற வகையில் காலிபிளவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் எல்லா காலத்திலும் காலிபிளவருக்கு நல்ல விலை கிடைக்கிறது.

    ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவரை நல்லமுறையில் பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கத் தொடங்கும் ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே வரும் 90 நாள்களில் அறுவடை செய்யலாம்.

    அறுவடை செய்யப்படும் காலிபிளவர் உடுமலை மற்றும் பொள்ளாச்சி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். உழவர் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடியை பொருத்தவரை பூக்களை அறுவடை செய்யக் கூடிய தருணத்தில் மழை பெய்தால் பூக்கள் அழுகி பாதிப்பு ஏற்படக்கூடும். 

    அசுவினி பூச்சிகள், வெட்டுப்புழுக்கள், கூட்டுப்புழு, நூற்புழு மற்றும் இலைப்புள்ளிநோய் வேர் முடிச்சு போன்றவற்றினால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக முறையான பராமரிப்பு மேற்கொண்டால் சிறந்த மகசூல் பெற முடியும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
    Next Story
    ×