search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது

    வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் போது அவர்களது ஆதரவாளர்கள் 2 கார்களில் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.

    இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யத் தொடங்கினார்கள்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

    தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்து யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

    இதன் காரணமாக முதல் நாளில் பெரிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மனுதாக்கல் செய்யவில்லை. சுயேட்சையாக களம் இறங்குபவர்களே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    சென்னை மாநகராட்சி பகுதிகளை போன்று நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சை வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ந்தேதி கடைசி நாளாகும். நாளை (சனிக்கிழமை) பணி நாள் என்பதால் அன்றைய தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இன்றும், நாளையும் மனுதாக்கல் செய்தது போக மேலும் 5 நாட்கள் மட்டுமே மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளர்களை விரைந்து தேர்வு செய்து அவசரம், அவசரமாக மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    வேட்புமனு தாக்கல் முடிவடைந்த மறுநாள் பிப்ரவரி 5-ந் தேதி வேட்பமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக இன்று பல கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றன.

    வருகிற திங்கட்கிழமைக்குள் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த வாரம் முதல் வேட்புமனுதாக்கல் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனுதாக்கலுக்கு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் போது அவர்களது ஆதரவாளர்கள் 2 கார்களில் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்களின் ஆதரவாளர்களை 200 மீட்டருக்கு முன்பே தடுத்த நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வேட்பாளர் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று முககவசம் அணிந்து வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    வேட்புமனுதாக்கலின் போது அரசியல் கட்சியினருக்கு இடையே மோதல் சம்பவம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலையில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


    Next Story
    ×