search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - சிகிச்சைக்கு உதவி மையங்களை அணுக வேண்டுகோள்

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பாதித்தோருக்கு உதவுவதற்காக வார்ட் ரூம் செயல்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 500, 1000, 1500 என்று படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,787 பேருக்கு நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 811 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். 

    இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 25ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 8ஆயிரத்து 918 பேர் திருப்பூர் மற்றும் கோவை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1037-ஆக அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பாதித்தோருக்கு உதவுவதற்காக வார்ட் ரூம் செயல்படுகிறது. கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆக்சிஜன் படுக்கை, சாதாரண படுக்கை விவரம், மாவட்டத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையங்கள், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை, வீட்டுத்தனிமை படுத்திக்கொண்டோர் மருத்துவ சந்தேகங்கள், அரசின் 104 இலவச மருத்துவ உதவி குறித்த தகவல்களை, கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.

    இதற்கு 0421 1077, 2971199, 2971133 என்கிற எண்களில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். கொரோனா பாதித்தோர், சிகிச்சைக்கு எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என வழிகாட்டுவதற்காக திருப்பூர் மாநகராட்சியில் 4, ஊரக பகுதிகளில் 15 என மொத்தம் 19 உதவி மையங்கள், இயங்கி வருகின்றன.

    தொற்று உறுதியானவுடன் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். பரிசோதனை முடிவுகளுடன் அருகிலுள்ள உதவி மையங்களை அணுகுங்கள். அம்மையங்களில் உள்ள மருத்துவர்கள் வழிகாட்டுதல்படி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கோ, கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டுத்தனிமைக்கு செல்லலாம். இவ்வாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×